Tuesday 18 October 2011

Thuppakki Goundar

             தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே முதன்முதலில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டது மருதுபாண்டியர்கள் தான் என்பது நாம் அனைவரும் அறிந்தது.  ஆனால்  அவர்களுக்கு பக்க பலமாக இருந்த பல ஆயிரம் வீரர்களை பற்றி நமக்கு தெரியாமலே போய்விட்டது. அப்படி மருதுபாண்டியர்கள் படையில் துப்பாக்கி படை தளபதியாக இருந்தவர் தான் இந்த மாவீரன் துப்பாக்கி கவுண்டர் என மருதுபாண்டியர்களால் அழைக்கப்பட்ட உதயபெருமாள் கவுண்டர் ஆவார். அப்படிப்பட்ட மாவீரனின் கதையை இங்கே குறிப்பிடப்பட்டு உள்ளது.
                தர்மபுரி பகுதியை சேர்ந்த உதயபெருமாள் கவுண்டர் அங்கே வெள்ளையர் படையில் இருந்து துப்பாக்கி பயிற்சி முடித்து விட்டு வெள்ளையருக்கு எதிரான போரட்டத்தில் ஈடுபட்டதால் வெள்ளையர்கள் அவரை கொல்லமுயன்றனர். அங்கிருந்து தப்பித்து சிவகங்கை பகுதிக்கு வந்த உதயபெருமாள் கவுண்டர் மருதுபாண்டியர்கள் படையில் சேர தருணத்தை எதிர்பார்த்து இருந்தார். அந்த தருணமும் வந்தது. 
                         வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து மாரநாடு கண்மாய் உடைப்பு ஏற்பட்டது.  வெள்ளப்பெருக்கால் அவதியுறும் மக்களை காப்பாற்றும் பணியில் மருதுபாண்டியர்கள் படை ஈடுபட்டதை அறிந்த கவுண்டர் அங்கே சென்று தன்னையும் மக்கள் பணியில் இணைத்துக்கொண்டார். கவுண்டர் அங்கே செயல்பட்ட வேகத்தை கண்ட மருதுபாண்டியர்கள் அவரை அழைத்து விசாரித்தனர். அப்போது கவுண்டர் சிவகங்கை பகுதிக்கு வந்த விதத்தையும் தமது துப்பாக்கி பிரயோக திறமையையும் குறித்து விளக்கினார்.  உடனே கவுண்டரின் திறமையை சோதிக்க நினைத்த பெரிய மருது வானத்தில் பறந்த வல்லூரு ஒன்றை சுட்டு வீழ்த்துமாறு கட்டளையிட்டார். மறு கணமே ஒரே தோட்டாவில் அந்த வல்லூருவை சுட்டு வீழ்த்தினார் கவுண்டர். கவுண்டரின் திறமையை பாராட்டிய மருதிருவரும், உடனடியாக தமது படையின் துப்பாக்கி பிரிவின் தலைவராக உதயபெருமாள் கவுண்டரை நியமித்ததுடன் அவரை துப்பாக்கி கவுண்டர் என்று அழைத்தும்  மேலும்   உதயபெருமாள் கவுண்டரை திருப்பாசேத்தி பகுதியின்  அம்பலகாரராகவும் (தலைவராகவும்) அறிவித்தும் கெளரவப்படுதினார்கள்.
                                    மருதிருவருரின் படையில் சிறப்பாக பணியாற்றிய உதயபெருமாள் கவுண்டர் தலைமையில்  திருப்பாசேத்தியில் 7.6.1801 ல் வெள்ளையருக்கு எதிரான போர்குறிப்பிடத்தக்கது. இந்த போரில் மேஜர் கிரே கொல்லப்பட்டது முக்கிய நிகழ்வாக கர்னல் வெல்ஷ் தமது டைரியில் பக்கம் 81 ,82 ல் குறிப்பிட்டு உள்ளார். 
                                          1801 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்     காளையார் கோவில், சிராவயல் பகுதிகளில் நடந்த போரில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திய   உதயபெருமாள் கவுண்டர் மருதிருவரின் உயிரை காக்க பெரிதும் பாடுபட்டார். ஒரு நாள் கர்னல்அக்நியுவை குறிவைத்தார் உதயபெருமாள் கவுண்டர் ஆனால்அவனது வெள்ளை கரடி குறுக்கேவந்து அவனது உயிரை காப்பாற்றியது. இந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தும் விதமாக பின்னாளில் கௌரி வல்லப உடையன தேவர் காளையார் கோவில் கோபுர வாசலில் உதயபெருமாள் கவுண்டர் வெள்ளை கரடியை சுட்டபடி ஒரு சிலையை அமைத்து உள்ளார். 
                                        1801 அக்டோபர் 1 முதல் 5 வரை நடந்த கடும் போரில் உதயபெருமாள் கவுண்டர் வெள்ளையரின் பிரங்கியில்வீரமரணம் அடைந்தார். அதன் பின்னரே வெள்ளையர்கள் மருதிருவரையும் பிடித்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.அத்தகைய மாவீரனை பற்றி அனைவரும் அறியும் விதமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
                                                 காளையார் கோவில் மு.சேகர் எழுதிய வீரம் விளைந்த சிவகங்கை செம்மண் என்ற புத்தகத்திலிருந்து மேலே கண்ட தகவல்கள் சேகரித்து எழுதப்பட்டுள்ளது.